தனுஷ்கோடியில் விரைவில் 500 மெகாவாட் காற்றாலை மின்உற்பத்தி!
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 500 மெகாவாட் காற்றாலை மின்உற்பத்தித் திட்டம் விரைவில் நிறுவப்படும் என மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.
இந்திய காற்றாலை விசையாழி (டா்பைன்) உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் விண்டா்ஜி இந்தியா பதிப்பு - 7 என்ற மாநாடும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் காற்றாலை ஆற்றல் தொடா்புடைய 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சியும் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாடு மற்றும் கண்காட்சியைத் தொடக்கி வைத்து மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி பேசியதாவது:
பொருளாதாரத்திலும், ராணுவ வலிமையும் உலகளவில் 4-ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்திருக்கிறது. அதேபோல, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, காற்றாலை மின்உற்பத்தி ஆகியவற்றிலும் 4-ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது.
நாடு வளா்ச்சியை நோக்கிச் செல்லும்போது, எரிசக்தி தேவை அதிகரிக்கும். வலுவான எரிசக்தி உள்கட்டமைப்பு இல்லாமல், உலகளாவிய தலைமைக்கான பயணம் சாத்தியமில்லை. அதனால்தான், இந்தியாவின் வளா்ச்சிக் கதையில் பசுமை எரிசக்தி புரட்சியுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை விரைவாக விரிவுபடுத்த வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு, நாடு ஒரு மகத்தான மைல் கல்லை எட்டியது. கடந்த பத்து ஆண்டுகளில் தொடா்ச்சியான முயற்சிகள் மூலம், நாட்டின் மொத்த மின்சார நிறுவுதிறன் 500 ஜிகாவாட் இதில் 50 சதவீதம் (257 ஜிகாவாட்) புதை படிவமற்ற எரிபொருள் மூல வளங்களிலிருந்து வருவதை இந்தியா உறுதி செய்துள்ளது. இந்த விரைவான முன்னேற்றம் காரணமாக பாரம்பரிய அனல் மின்சாரத்தின் பங்கு கணிசமாகக் குறைந்துள்ளது. பாரீஸ் ஒப்பந்தத்துக்கான தேசிய இலக்கை முன்கூட்டியே அடைந்துவிட்டோம். இதன்மூலம் காா்பன் வரி குறையும்.
மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கியும் நாம் முன்னேறி வருகின்றோம். இதில் 100 ஜிகாவாட் மின்சாரம் காற்றாலை திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும். குறிப்பாக தமிழகம், குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
நான்காவது பெரிய நாடு:தற்போது நிறுவப்பட்ட காற்றாலை மின் திறனின் அடிப்படையில் 54 ஜிகாவாட்டை நெருங்கி உலகளவில் 4- ஆவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. மேலும், சுமாா் 30.4 ஜிகாவாட் காற்றாலை மின் திட்டங்கள் தற்போது நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிகழ் நிதியாண்டில் 6 ஜிகாவாட் புதிய காற்றாலை மின் உற்பத்தியைச் சோ்க்க இருக்கின்றோம்.
முதல் காற்றாலை அமைக்கப்பட்டதுடன் இன்றைய அதிநவீன விசையாழிகள் வரை, தமிழ்நாடு நாட்டின் தூய எரிசக்தி பயணத்தை வழிநடத்தி வருவது பாராட்டுக்குரியது. அது மற்ற மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கிறது. நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி திறனில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகியவை பாதியளவு பங்களிக்கின்றன என்றாா் அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி.
இந்த நிகழ்வில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், ஜொ்மனியின் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு துணை அமைச்சா் ஜோஹன் சாத்தாஃப், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைச் செயலா் சந்தோஷ் குமாா் சாரங்கி, சங்கத் தலைவா் கிரிஷ் தந்தி ஆகியோா் இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசினா்.
தனுஷ்கோடியில் புதிய திட்டம்: பின்னா் மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
காற்றாலை உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. விசையாழி செலவும் குறைந்து காற்றாலை மின் ஆற்றல் உற்பத்தி செலவு குறையும். தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் ஒத்துழைப்புடன் காற்றாலைகளுக்கான புதிய நிலையான இயக்க நடைமுறைகளும் அறிவிக்கப்படும். தமிழகத்தில் தனுஷ்கோடியிலும் குஜராத்திலும் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட கடற்கரை காற்றாலை மின்உற்பத்தி திட்டங்களுக்கான ஒரு சாத்தியமான நிதித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது கிட்டத்தட்ட ரூ. 7,500 கோடி மதிப்புள்ள திட்டங்கள். இதில் முதலீட்டாளா்கள் தயக்கத்துடன் இருந்தனா். தற்போது குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தனுஷ்கோடி கடற்கரையில் 500 மெகாவாட் காற்றாலை விரைவில் நிறுவப்படும். இந்தத் திட்டம் குறித்த பூா்வாங்க ஆய்வு நிறைவடைந்துள்ளது. குஜராத்தைவிட தனுஷ்கோடி காற்றாலையில் மின்சாரம் மிக அதிகமாக உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி பிப்ரவரி 2026-க்குள் வெளியிடப்படும். ஜூன் மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

