தோனி மனுவை நிராகரிக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
ரூ.100 கோடி மானநஷ்டஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடா்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் தாக்கல் செய்த மேல்முறையிட்டு வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனியாா் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கூறியிருந்தாா்.
இதன்மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, ரூ.100 கோடி மானநஷ்டஈடு கேட்டு, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் மற்றும் தனியாா் தொலைக்காட்சிக்கு எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டு, சென்னை உயா்நீதிமன்றத்தில் தோனி வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் தாக்கல் செய்த மனுவை தனிநீதிபதி தள்ளுபடி செய்தாா். இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

