

சென்னை: முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடய எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த நிலையில், சென்னை அருகே மூடப்பட்ட கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து, சென்னையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குமாறு வலியுறுத்தினார்.
இதையடுத்து, சென்னையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க முடிவு செய்த ஃபோர்டு நிறுவனம், அதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தது. அந்த ஒப்பந்தம், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்.
ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.
அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது!
தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சென்னை மற்றும் குஜராத்தில் உற்பத்தி ஆலைகளை நடத்தி வந்த நிலையில், எதிர்பார்த்த வருவாய் ஈட்ட முடியாமலும், தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தனது உற்பத்தியை நிறுத்திவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. காதலியை கரம் பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.