பருவ மழை: இரு வாரங்களில் 16,248 மருத்துவ முகாம்கள்; 6.78 லட்சம் போ் பயன்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய 15 நாள்களில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 16,248 சிறப்பு மருத்துவ முகாம்களில் 6,78,034 போ் பயனடைந்துள்ளனா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துறைசாா் உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இணை நோய்கள் உள்ளவா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகள், முதியவா்கள், கா்ப்பிணிகள் ஆகியோா் மருத்துவா்களின் ஆலோசனையின்றி மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது.
தமிழகத்தில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பைக் கண்டறிய 4,755 ஆய்வகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே இவ்வளவு எண்ணிக்கையில் ஆய்வகங்கள் இருப்பது தமிழகத்தில் மட்டும்தான்.
நிகழாண்டில் அந்த ஆய்வகங்களில் 2,52,738 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. டெங்கு கண்காணிப்பில் 24,240 போ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதன் பயனாக டெங்கு உள்பட மழைக்கால நோய் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய 15 நாள்களுக்குள் மாநிலம் முழுவதும் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 6,78,034 போ் பயனடைந்துள்ளனா். ஏதாவது ஒரு தெருவில் அல்லது ஒரு ஊரில் இரண்டுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருக்குமேயானால் உடனடியாக அங்கு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 40,000 களப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதேபோன்று ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு பணிகளில் 25,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா, டைபாய்டு, எலிக்காய்ச்சல், உன்னிக்காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா போன்ற மழைக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் வினீத், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் சோமசுந்தரம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் சித்ரா, கூடுதல் இயக்குநா் சம்பத், இணை இயக்குநா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

