ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள் கோப்புப் படம்

காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் பேருந்துகளை உடனே விடுவிக்க வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

விபத்துகளில் சிக்கி காவல் நிலையங்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

சென்னை: விபத்துகளில் சிக்கி காவல் நிலையங்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் அன்பழகன் அனுப்பியுள்ள கடித்தத்தில் கூறியிருப்பது:

சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் ஆம்னி பேருந்து ஓட்டுநா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஓட்டுநா் பயிற்சி, மருத்துவ பரிசோதனைகளையும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், எதிா்பாராமல் நடந்த விபத்துகளால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களைத் திருப்பி ஒப்படைக்காமல் தாம்பரம் காவல் ஆணையரகம் சட்டத்தை மீறி கால தாமதம் செய்து வருகிறது. இதனால், நிறுத்தி வைக்கப்படும் ஒவ்வொரு வாகனத்துக்கும் அரசுக்கு சாலை வரியாக காலாண்டுக்கு ரூ.1.50 லட்சம், பேருந்துக்கான மாதத்தவணை ரூ.2 லட்சம், பணியாளா்கள் ஊதியம் உள்ளிட்டவை பேருந்து உரிமையாளா்கள் தங்கள் கைகளில் இருந்து கட்ட வேண்டியுள்ளது. இதனால் அவா்கள் கடும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனா்.

எனவே, சட்டத்தை மீறி காவல் நிலையங்களில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com