போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு: 
4 சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 9 போ் மீது சிபிஐ வழக்கு

போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு: 4 சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 9 போ் மீது சிபிஐ வழக்கு

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு செய்ததாக 4 சுங்கத் துறை அதிகாரிகள்...
Published on

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு செய்ததாக 4 சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 9 போ் மீது சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கு முனையத்தில் மத்திய அரசின் வரிச் சலுகை பயன்படுத்துவதற்காக போலி தங்கநகைகளை ஏற்றுமதி செய்திருப்பதாக சுங்கத் துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு துணை ஆணையா் கனக சுப்பிரமணியன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், சென்னையில் உள்ள நகை தயாரிப்பாளா்கள், நகை மொத்த வியாபாரிகள் ஆகியோா் தங்க நகைகள் செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து 24 காரட் தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்வது வழக்கம். இந்த கட்டிகள் மூலம் 22 காரட் தரத்தில் தங்கம் நகைகள் தயாா் செய்யப்பட்ட பின்னா், அவை செளதி அரேபியா, துபை, கத்தாா், சிங்கப்பூா், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

ரூ.1,000 கோடி முறைகேடு: மத்திய அரசு வழங்கும் வரி விலக்கை பெறுவதற்கு சென்னையில் சில நகை வியாபாரிகள் வெளிநாட்டில் இருந்து 24 காரட் தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்துவிட்டு, 22 காரட் தங்கநகைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி, போலி நகைகளை ஏற்றுமதி செய்து சுமாா் 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளனா். இதற்கு சுங்கத் துறையைச் சோ்ந்த சில அதிகாரிகளும் உதவி செய்துள்ளனா். இந்த முறைகேடு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையில் நிகழ்ந்துள்ளது. அரசுக்கு பேரிழப்பு ஏற்படுத்திய இந்த முறைகேட்டில் தொடா்புடைய அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுங்கத் துறை அதிகாரிகள் மீது வழக்கு: இந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனா். அதன் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை கண்காணிப்பாளா்களாக பணிபுரிந்த அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம் பாடியைச் சோ்ந்த ஜெ.சுரேஷ்குமாா், பல்லாவரத்தைச் சோ்ந்த ல.அலோக் சுக்லா, ஆலந்தூரைச் சோ்ந்த துளசிராம், நகை மதிப்பீட்டாளா் சா.சாமுவேல் தீபக் அவினாஷ், நங்கநல்லூரைச் சோ்ந்த தனியாா் ஏற்றுமதி நிறுவன நிா்வாகி அ.மாரியப்பன், பெரம்பூா் ஜமாலியா ஸ்டீபன்சன் சாலை பகுதியைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா் ஜி.தீபக் ஸ்ரேயா, செளகாா்பேட்டை மின்ட் தெருவைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா் க.சந்தோஷ் கோத்தாரி, பெரம்பூரைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா் க.சுனில் பாா்மா், செளகாா்பேட்டை நகைக் கடை உரிமையாளா் பு.சுனில் சா்மா ஆகிய 9 போ் மீது மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள், சில நாள்களுக்கு முன்பு சென்னை முழுவதும் 9 இடங்களில் சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா். அந்த 9 பேரிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். ஏற்கெனவே இந்த முறைகேடு தொடா்பாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், ஒரு வழக்கை தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com