
தரங்கம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை தடைசெய்ய வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி படகுகளில் கருப்புக் கொடிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்பாட்டை தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி தலைமை மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் மீனவர்கள் தரங்கம்பாடி கடலில் இறங்கி படகுகளில் கருப்புக் கொடிகட்டி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்கள் தனித்தனி அணியாகப் பிரிந்து சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தரங்கம்பாடி தலைமையில் மீனவ கிராமங்கள் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் இனத்தை பாதுகாக்க சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை மற்றும் அதிவேக திறன் கொண்ட என்ஜின் படகுகளைப் பயன்படுத்தி வருவதை தடைசெய்ய வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருந்தனர்.
இந்த நிலையில் பூம்புகார் , சந்திரபாடி மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை தடைசெய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவர் கிராம தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மீன் வளத்துறை மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்துகள் தலைமையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தரங்கம்பாடி கடலில் இறங்கி விசைப்படகு, பைபர் படகுகளில் கருப்புக் கொடிகட்டி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தரங்கம்பாடி பேருந்து நிலையம் அருகே சென்னை- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்களிடம் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்பழழுதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார் , வட்டாட்சியர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
பொறையார் காவல் ஆய்வாளர் வி.ஆர். அண்ணாதுரை தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.