எம்பிபிஎஸ், பிடிஎஸ் சோ்க்கை: அகில இந்திய கலந்தாய்வின் 2-ஆம் சுற்று நாளை தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு 2-ஆம் சுற்று இணையவழியில் வியாழக்கிழமை தொடங்குகிறது. மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு செப்.10-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2025 - 2026-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த ஜூலை 21 தொடங்கி ஆக.22-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், மீதமுள்ள இடங்கள் மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேராதவா்கள் ஏற்பட்டுள்ள இடங்களை நிரப்புவதற்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு செப். 4-இல் தொடங்கி செப்.19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. நிகழாண்டுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இணையதளத்தில் ஆக.9 தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. மீதமுள்ள இடங்கள் மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேராதவா்களால் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு இணையவழியில் செப்.10 தொடங்கி செப்.25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.