6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...
மேட்டூர் அணை.
மேட்டூர் அணை.
Published on
Updated on
2 min read

மேட்டூர் அணையானது நடப்பாண்டில் 6வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது.

உபரிநீா்வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் முறையாகவும், ஜூலை 5ஆம் தேதி 2ஆவது முறையாகவும், ஜூலை 20 ஆம் தேதி 3ஆவது முறையாகவும், 25ஆம் தேதி 4ஆவது முறையாகவும், ஆகஸ்ட் 20ஆம் தேதி 5-ஆவது முறையாகவும் அணை நிரம்பியது. அதன்பிறகு மழை குறைந்ததாலும், காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடா்ந்து தண்ணீா் திறக்கப்பட்டதாலும் அணையின் நீா்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது. கடந்த 30ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 118.65 அடியாகக் குறைந்தது.

இந்நிலையில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவில் உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் மெல்ல உயரத் தொடங்கி, இன்று(செப். 2) முழு கொள்ளளவை எட்டி நடப்பாண்டில் 6வது முறையாக நிரம்பியுள்ளது.

மேட்டூா் அணை நிரம்பியதால், அணையின் இடதுகரையில் உள்ள 16 கண் பாலம் வழியாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் உபரிநீர் போக்கி கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும், வெள்ளப்பெருக்கில் குளிக்க, துணிதுவைக்கக் கூடாது. சுயப்படம் எடுப்பதையும், கால்நடைகளை குளிப்பாட்டுவதையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 23ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01அடியாக உயர்ந்தது. அதன்பிறகு தொடர்மழை காரணமாக திங்கள்கிழமை 315ஆவது நாளாக அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழே குறையாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று(செப். 2) காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 35,800 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,500 கன அடி வீதமும் உபரி நீர் போக்கி வழியாக விநாடிக்கு 12,500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Summary

The Mettur Dam has reached its full capacity of 120 feet for the 6th time this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com