சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
பணிநிரந்தரம் கோரி கடந்த மாதம் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு நடைபெற்ற போராட்டம் இரண்டு வாரங்களாக நீடித்தது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம், இடது சாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால், மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேன்மொழி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தூய்மை பணியாளர்களை போராட்டக் களத்திலிருந்து காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கடந்த 13ஆம் தேதி வெளியேற்றினர்.
இந்த நிலையில், போராட்டம் நடத்த தூய்மை பணியாளர்கள் காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிக்க | திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.