
மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்துவது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் சென்னை, தலைமைச் செயலகம், பிரதான கட்டடம், இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (செப். 2) தொலைநோக்குத் திட்டங்கள் செயலாக்கம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, மாதந்தோறும் மின் கட்டணம் என்ற அறிவிப்பு எப்போது வரும் என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்படும் பட்சத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்துவது மக்களுக்கு எளிமையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவது என்ற நடைமுறையை மாற்றி, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில், வாக்குறுதியாக மாதம் ஒரு முறை மின் கட்டண வசூல் என்ற நடைமுறை கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்த உடன், மாதம் ஒருமுறை மின்கட்டணம் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தோ்தல் விரைவில் நெருங்குவதால் சில மாத காலத்துக்குள், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட சில பகுதிகளிலாவது மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை சோதனை அடிப்படையிலாவது தொடங்க வேண்டும் என்ற கட்டாயத்தில், உயரதிகாரிகள் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: கவுன்சிலர்கள் பதவிநீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.