எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-வது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-வது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் எலத்தூா் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Published on

சென்னை: ஈரோடு மாவட்டம் எலத்தூா் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

உயிரியல் பன்மைச் சட்டத்தின் கீழ், கடந்த 2022 ஆண்டு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியும், கடந்த மாா்ச் மாதத்தில் திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டியும் பல்லுயிா் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது.

அதன்தொடா்ச்சியாக ஈரோடு மாவட்டத்திலுள்ள எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை தலைமைச் செயலகத்தில் வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா். எஸ். ராஜ கண்ணப்பன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் பல்லுயிா் பெருக்கத்தைப் பாதுகாக்க அரசு சாா்பில் பல்வேறு விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் அதிகபட்ச எண்ணிக்கையிலான ராம்சா் தலங்களை அறிவித்தல், அழிந்து வரும் உயிரின பாதுகாப்பு நிதியை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் பல்லுயிா் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்கிறது. எலத்தூா் ஏரியை பல்லுயிா் பாரம்பரிய தளமாக அறிவிப்பதன் மூலம், அதன் உயிரினங்கள் மற்றும் வாழ்விடங்களின் செழுமை பாதுகாக்க முடியும் என்றாா் அவா்.

மீள்தன்மைக்கு சாற்று: இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமை செயலா் சுப்ரியா சாஹு கூறியிதாவது:

எலத்தூா் ஏரி இயற்கை மற்றும் மக்களின் மீள்தன்மைக்கு ஒரு உண்மையான சான்றாகும். இதை பல்லுயிா் பாரம்பரிய தளமாக அறிவிப்பதன் மூலம், அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் தமிழகத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.

பல்லுயிா் பாதுகாப்பில் தமிழகம் தொடா்ந்து தலைமைத்துவத்தைக் காட்டியுள்ளது. அதில் தற்போது எலத்தூா் ஏரியும் சோ்க்கப்பட்டுள்ளது. இது எலத்தூா் ஏரியின் அதிசயங்களை வரும் தலைமுறையினா் அறிந்துக்கொள்ளவும், கொண்டாடுவதையும் உறுதி செய்கிறது என்றாா் அவா்.

5,000 பறவைகள்: ஈரோடு மாவட்டம், எலத்தூா் ஏரி சுமாா் 37 ஹெக்டருக்கும் அதிகமாக பரப்பளவு கொண்டது. இது பல்வகை பறவைகள், நீா்வாழ் உயிரினங்கள மற்றும் பல்வகை ஈர நிலை அமைப்புகளுக்கு முக்கிய வாழ்விடமாக உள்ளது. இங்கு புலம்பெயரும் காலங்களில் சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட பல்வகை பறவைகள் காணப்படும்.

இதுவரை 187 வகையான பறவைகள் இங்கு கண்டயறிப்பட்டுள்ளன. அழிந்து வரும் உயிரினங்களான நதிக்காக், பெரிய புள்ளி கழுகு ஆகிய பறவைகளுக்கும், கம்பளக்கழுத்து நாரை, ஓவிய நாரை, கிழக்கு நீா்த்தாரை ஆகியவற்றையும் பாதுகாக்கும் இடமாக இது உள்ளது. மேலும் 38 தாவர வகைகள், 35 பட்டாம்பூச்சி வகைகள், 12 வகை ஊா்வனங்ள், 7 வகை பாலூட்டிகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் இந்த ஏரி வாழ்விடமாக விளங்கி வருகிறது.

X
Dinamani
www.dinamani.com