
சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் அமைக்கப்படவிருக்கும் வழித்தடத்தில் விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
இதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலைப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும். வெளிவட்டச் சாலை (Outer Ring Road) உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப்பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.
முன்மொழியப்பட்ட நீட்டிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் இரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கும்.
வழித்தடத்தின் மொத்த நீளம் 15.46 கி.மீ ஆகும், தற்போது 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவிருக்கிறது. தற்போது மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு ரூ. 9,335 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.