கட்சி விரோத நடவடிக்கை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வரும் செப். 10 வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி அன்புமணி, கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவா் இதுகுறித்து ஆக. 31-க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த நோட்டீஸுக்கு அன்புமணி தரப்பில் எந்த பதிலும் அனுப்பப்படவில்லை.
குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கமளிக்க கடந்த 31 ஆம் தேதியுடன் கெடு முடிந்த நிலையில், மேலும் 10 நாள்கள் அவகாசம் அளிப்பதாக ராமதாஸ் இன்று கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ்,
"அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? என்பது பற்றியும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் வருகிற செப். 10 ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையின் படியும் கட்சி நிர்வாகக் குழுவின் முடிவின்படியும் அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் பொதுச் செயலாளர் இதுகுறித்த அறிக்கையை அன்புமணிக்கு அனுப்பி வைப்பார்.
முதல்முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு பதில் வரவில்லை. நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கக் கேட்டிருந்தோம். நிர்வாகக் குழு கூடி, மேலும் 10 நாள்கள் அவருக்கு கால அவகாசம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளது. பதிலளிக்கவில்லை எனில் என்ன நடவடிக்கை எடுப்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.