
அதிமுக பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், பொதுச் செயலர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 4-வது உதவி உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த ஆக. 1 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.பி. பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயண், இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக பொதுச் செயலாளர் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்டவர். எனவே, வழக்கு தொடர அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இவற்றை எல்லாம் உரிமையியல் நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. எனவே உரிமையியல் நீதீமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.
அந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (செப்.4) விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அதிகாரபூர்வமாக செல்லும் என்று உத்தரவிட்டது.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கு எதிரான 2 வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 3-வது வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.