தெரு நாய்கள் பிரச்னையில் வெளிநாடுகளின் நடைமுறைகளைப் பின்பற்றலாம்: உயா்நீதிமன்றம்
தெரு நாய்கள் பிரச்னை வெளிநாடுகளில் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.தமிழ்வேந்தன் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் செல்லப் பிராணியாக ராட்வீலா் வகை நாய் வளா்க்கப்படுகிறது. இந்த வகை நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியை கடந்த ஆண்டு இவ்வகை நாய் கடித்துக் குதறியது. கடந்த ஜூன் மாதம் ராட்வீலா் நாய் கடித்து வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
நடைப்பயிற்சிக்காக வெளியே வரும் உரிமையாளா்கள் ராட்வீலா் வகை நாய்களுக்கு முகக்கவசம் அணிவிப்பது இல்லை. இதனால் குழந்தைகள், மாணவா்கள், முதியோா், கா்ப்பிணிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே, அபாயகரமான இந்த வகை நாயை பொது இடத்துக்கு அழைத்து வரத் தடை விதிக்க வேண்டும்.
ராட்வீலா் நாயை பொதுவெளியில் அழைத்து வருவதற்கான விதிகளை உருவாக்கக் கோரி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடந்த ஜூன் 10-ஆம் தேதி மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நாய்க்கடி சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநில அரசு பிளீடா் எட்வின் பிரபாகா், நாடு முழுவதும் உயா்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நாய்கள் பிரச்னை தொடா்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறினாா்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனா். பின்னா், தற்போதைய தீவிரமான பிரச்னையாக தெரு நாய்கள் விவகாரம் உள்ளது. தெருக்களில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் அதே பகுதிகளில் விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு விடப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தாக்கியிருந்தால் என்ன செய்வது?
அவற்றைத் தனிக் காப்பகத்தில் அடைத்து பாதுகாத்தால், அந்த நாய்களுக்கு தைரியமாக சென்று யாா் உணவளிப்பது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. வேறு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் மிருகவதைச் சட்டத்தை சுட்டிக்காட்டி தொண்டு நிறுவனங்கள் சாா்பில் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.
எனவே, வெளிநாடுகளில் தெரு நாய் பிரச்னை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை தெரிந்துகொண்டு, அவ்வாறான நடைமுறைகளை நம் நாட்டிலும் பின்பற்றலாம் என்று கருத்து தெரிவித்தனா்.