ஜிஎஸ்டி கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்: இந்திய கம்யூ.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் கே. நாராயணா பேட்டி
GST Council should be restructured: CPI
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் கே. நாராயணா.DIN
Published on
Updated on
2 min read

நாட்டில் ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயகப்பூர்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் கே. நாராயணா வியாழக்கிழமை கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாநில மாநாடு புதன்கிழமை இரவு முடிந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த தேசிய செயலர் கே. நாராயணா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

கடந்த 9 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டி என்ற பெயரில் நாட்டை கொள்ளையடித்தது. தற்போது பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது நல்ல முன்னேற்றம்தான். பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வருவதைக் கருத்தில்கொண்டுதான் பாஜக தலைமையிலான மத்திய அரசு இதைச் செய்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலில் மொத்தம் உள்ள உறுப்பினர்களில் 30 சதவீதம் பேரை மத்தியில் உள்ள பாஜக அரசு நியமித்துள்ளது. மீதியுள்ள 70 சதவீதம் பேர்தான் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள். அதுவும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜகவைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த கவுன்சிலில் பங்கேற்கின்றனர். அதனால் ஏற்கெனவே மத்திய அரசு முன்மொழியும் தீர்மானங்களை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த உறுப்பினர்கள் எதிர்ப்பது இல்லை.

ஒன்றிரண்டு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சி நடத்தும் மாநில உறுப்பினர்கள் எதிர்த்தாலும் எடுபடுவதில்லை. அதனால் ஜிஎஸ்டி கவுன்சில் நாட்டில் ஜனநாயகப்பூர்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்.

பாஜகவை நம்பி எந்த மாநிலக் கட்சி சென்றாலும் அந்தக் கட்சியை ஒழிப்பதுதான் பாஜகவின் வேலையாக இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் சிவசேனையை ஓரங்கட்டி ஷிண்டே தலைமையிலான கட்சியை ஆதரித்து இப்போது அவரை முற்றிலும் பாஜக ஒழித்துவிட்டது. தமிழகத்தில் அதிமுகவை பிளவுபட வைத்துள்ளது. தெலங்கானாவில் பாஜக மறைமுகமாகச் செயல்பட்டு வருவதால் சந்திரசேகர ராவ் தன்னுடைய மகள் கவிதாவை பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். அதேபோன்ற நிலைதான் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு ஏற்படும்.

தற்போது ஆட்சியில் சிறுபான்மையாக உள்ள பாஜக வரும் தேர்தலில் 50 சதவீதம் இடங்களைக் கேட்டு போட்டியிடும். மீதி 50 சதவீதம் இடங்களை ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸுக்கு அளிக்கும். தற்போது புதுவையில் இந்த இரண்டு கட்சிகளும் மக்களுக்கு விரோதமான ஆட்சியை அளித்து வருவதால் இந்த இரண்டு கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு புதுவையில் காணாமல் போய்விடும். ஏனென்றால் புதுவையில் 'இண்டி' கூட்டணி மக்களுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களை நடத்த உள்ளது என்றார் நாராயணா.

கட்சியின் புதுவை மாநிலச் செயலராக மூன்றாவது முறையாக ஒரு மனதாக அ.மு. சலீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நாரா. கலைநாதன் அவரை அறிமுகப்படுத்தினார். கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் இ.தினேஷ் பொன்னையா, விவசாயிகள் அணித் தலைவர் கீதநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Summary

Communist Party of India National Secretary K. Narayana says that GST Council should be restructured

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com