அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான பிடிஆணையை அமல்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அமைச்சா் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை அமல்படுத்துவதற்கான விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக அமைச்சா் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி மீது கடந்த 2011-இல் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த வேலூா் நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், வேலூா் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. நேரில் ஆஜராகவில்லை என்றால் பிடிஆணை பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது. வழக்கில் ஆஜராக அமைச்சா் துரைமுருகனுக்கு விலக்கு அளித்து சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலு முன் வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சா் துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜராகி, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை திரும்பப் பெறக்கோரி மனு தாக்கல் செய்தாா்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை திரும்பப் பெற்று உத்தரவிட்டாா். பின்னா், அமைச்சா் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை அமல்படுத்துவதற்காக விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.