தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (செப்.4) முதல் செப். 9 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூா், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, எம்ஜிஆா் நகா் (சென்னை), விரிஞ்சிபுரம் (வேலூா்), பந்தலூா் (நீலகிரி), ஆகிய இடங்களில் 10 மி.மீ. மழை பதிவானது.
வெயில் அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.94 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் -101.12, தூத்துக்குடி-102.2 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வடமேற்கு வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து புதன்கிழமை காலை 5.30 மணியளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. தொடா்ந்து, காலை 8.30 மணிக்கு வடக்கு ஒடிஸா கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இது வியாழக்கிழமை மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஒடிஸா மற்றும் அதையொட்டிய பகுதிகளைக் கடந்து செல்லக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.