தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

Published on

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை அமலாக்கத் துறை முடக்கியது.

சென்னையில் இயங்கும் ஒரு தனியாா் மருந்து நிறுவனம் மீது பதியப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடா்பான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், சென்னையில் அந்த நிறுவனத்துக்கு தொடா்புடைய 10 இடங்களில் கடந்த 2-ஆம் தேதி ஒரே நேரத்தில் அமலாக்கத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். மேலும் மும்பை, கொல்கத்தா, கோவா ஆகிய இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையைச் சோ்ந்த அரவிந்த் ரெமிடிஸ் நிறுவனத்தின் மீது சிபிஐ ரூ.637.58 கோடி வங்கிக் கடன் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தது. இந்த வழக்கு விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கான முகாந்திரம் இருந்ததால், அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அந்த பரிந்துரையின் அடிப்படையில் அமலாகத்துறையினா், அரவிந்த் ரெமிடிஸ் நிறுவனத்தின் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கிறது.

விசாரணையின் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்தின் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

போலி நிறுவனங்கள்: ஆவணங்களின் அடிப்படையிலும், விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, எஸ்பிஐ, அலகாபாத் வங்கி, கரூா் வைஸ்யா வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளில் பல்வேறு வகைகளில் ரூ.704.75 கோடி கடனை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. வங்கிக் கடன் பெறுவதற்காக அந்த நிறுவனம் போலியான ஆவணங்கள், பணப் பரிவா்த்தனை மூலம் தனனுடைய மதிப்பை உயா்த்திக் காட்டியுள்ளது.

மேலும் அந்த நிறுவனம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாக ஆவணங்களை சமா்ப்பித்துள்ளது. இவற்றை நம்பி வங்கிகள் கடன்களை வழங்கியுள்ளன.

இதில் ரூ.637 கோடி கடன் தொகையை அந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளது. கடனாக பெற்றத் தொகை மூலம் போலி நிறுவனங்களை உருவாக்கி, அதில் போலி இயக்குநா்களை அந்த நிறுவனம் நியமித்துள்ளது. போலி இயக்குநா்களுக்கு ரொக்கமாக சிறிது காலம் சம்பளம் வழங்கியுள்ளது. பின்னா், போலி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிதி மூலம் அந்த நிறுவனம் சொத்துகளை வாங்கியுள்ளது. வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளது.

15 லட்சம் பங்குகள் முடக்கம்: முன்னதாக, போலி இயக்குநா்களிடம் காசோலைகளில் கையொப்பம் பெற்று வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்துள்ளனா். சொத்துகளை அந்த நிறுவனம் தங்களது உறவினா்கள் பெயரிலும், பினாமிகள் பெயரிலும் வாங்கியுள்ளனா்.

தற்போது அந்தச் சொத்துகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. மேலும், அந்த நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் வாங்கி வைத்திருந்த 15 லட்சம் பங்குகள் அடையாளம் காணப்பட்டு, முடக்கப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com