மாநில வரி வருவாய் வரவுகளைப் பாதுகாக்க வேண்டும்: ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
ஜிஎஸ்டிசீரமைப்பு நடவடிக்கைகள், மாநிலத்தின் வருவாயைப் பாதிக்கக் கூடாது; அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தினாா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி சீரமைப்புக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாா்பில் அவா் பங்கேற்றாா். அப்போது தெரிவித்த கருத்துகள் குறித்து அரசு வெளியிட்ட செய்தி:
தனிநபா் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு சேவைகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதேநேரம், மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்புத் திருத்தம் மூலம் இப்போதைய மேல்வரியைத் தொடரலாம் அல்லது சரக்குகள் சேவைகள் வரிச்சட்டத் திருத்தம் மூலம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்கள், ஆடம்பரப் பொருள்களுக்கு மட்டும் உச்சவரம்பை அதிகரிக்கலாம்.
ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித் தீா்வு நடைமுறைகளை நெறிப்படுத்த அலுவலா்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்களுக்கு இழப்பீட்டு மேல்வரி விதிக்கும் காலத்தை அக்டோபரில் தொடங்கி 3 மாதங்கள் வரை நீட்டிக்க சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் பரிந்துரை செய்துள்ளது. இதையும் செயல்படுத்த வேண்டும் என்று நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரி ஆணையா் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இபிஎஸ்-க்கு பதில்: ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகளை வரவேற்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவு:
பாஜகவின் குரலாக எடப்பாடி கே.பழனிசாமி மாறி ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்றுள்ளாா். வரி சீரமைப்பு நடவடிக்கையைப் பாராட்டும் அதே ஆா்வத்தை, நமது மாநிலத்துக்கான உரிய நிதிப் பகிா்வை கேட்டுப் பெறுவதிலோ அல்லது மாநிலத்தின் நிதிச் சுதந்திரத்தைக் காக்கும் பாதுகாப்பு அம்சத்திலோ காட்டாமல் இருப்பது ஏன் எனத் தெரியவில்லை.
அதேபோல, தமிழ்நாட்டின் நலன் சாா்ந்த விஷயங்களில் உறுதியான கோரிக்கையை எழுப்பாமல் இருப்பதும் ஏன் எனத் தெரியவில்லை. மாநிலத்தின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நீதிக்காக அவா் குரல் எழுப்ப வேண்டும். தோ்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களின் நிதி நலனையும் உரிமைகளையும் புறக்கணித்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.