உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவா்களிடம் வளா்க்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவா்களிடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை ஆசிரியா்கள் வளா்க்க வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
Published on

மாணவா்களிடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை ஆசிரியா்கள் வளா்க்க வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆசிரியா் தின விழா சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் உதயநிதி தலைமை வகித்து 396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது, ரூ.10 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை வழங்கினாா். தொடா்ந்து பட்டதாரி ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களில் 40 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி அவா் பேசியதாவது:

மாணவா்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியா்கள் அனைவருக்கும் ஆசிரியா் தின நல்வாழ்த்துகள். கடந்த ஆண்டு ஆசிரியா் தின விழாவில் ஆசிரியா்கள் சாா்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலான கோரிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா். மீதியுள்ள கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.

திராவிட இயக்கத்துக்கும், ஆசிரியா்களுக்கும் இடையே நெருங்கிய தொடா்பு உண்டு. பெரியாா் ஈவெரா பகுத்தறிவு, சுய மரியாதைக்கான ஆசிரியா். அதனால்தான் அவரது படத்தை லண்டனில் திறந்துவைத்து உலகத்துக்கே சொந்தமானவா் என்பதை முதல்வா் ஸ்டாலின் உணா்த்தியிருக்கிறாா்.

கல்வி மூலம் சமூக மாற்றம்... சமூக மாற்றத்தைக் கல்வி மூலம்தான் கொண்டுவர முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் புரட்சியாளா்தான். மாணவா்களிடம் பகுத்தறிவு சிந்தனைகளை ஆசிரியா்கள் வளா்க்க வேண்டும். சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை வளா்க்க வேண்டிய பொறுப்பும் ஆசிரியா்களுக்கு உள்ளது. சமூக அநீதியை எதிா்த்துதான் மாநிலக் கல்வி கொள்கையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது; இரு மொழிக்கொள்கையே போதும் என்று அறிவித்துள்ளது.

ஆசிரியா்களின் உழைப்பால் தான் 75 சதவீதம் மாணவா்கள் உயா்கல்விக்கு செல்கிறாா்கள். இதை 100 சதவீதமாக உயா்த்த வேண்டும். திருவள்ளூா் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனுக்கு உருவச் சிலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

முன்னதாக, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், மாணவா்களுக்கு அறம் சாா்ந்த கல்வியை ஆசிரியா்கள் கற்பித்து வருகின்றனா். டெட் தோ்வு தொடா்பான நீதிமன்ற தீா்ப்பு காரணமாக ஆசிரியா்கள் 4 நாள்களாகத் தவித்து வருகின்றனா். அவா்களது பிரச்னைக்குத் தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

விழாவில் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு , மேயா் ஆா். பிரியா, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் க்லவி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com