தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசியதாவது:
கடந்த இரண்டு மாதங்களில், 5,474 முகாம்கள் நடத்தப்பட்டு, 43.70 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.
வைரஸ் காய்ச்சல் தொடா்பாக யாரும் பயப்பட வேண்டாம். இந்தக் காய்ச்சல் பருவமழை காலங்களில் ஏற்படும் நோய் தொற்றுதான். புதிய நோய் பாதிப்புகள் ஏதும் இல்லை. கேரளத்தில் மூளையை தின்னும் அமீபா நோய் பற்றி பரவலான பதற்றம் உருவாக்கப்பட்டது. இது தொற்று நோய் அல்ல என்பதால், பயப்பட வேண்டியதில்லை.
அதேநேரம், துாா்வாரப்படாத குட்டைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, முன்னெச்சரிக்கை அவசியம். இதுபோன்ற மாசுப்பட்ட நீா்நிலைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கண்காணிக்கப்படுகிறது. இதுவரை அந்த மதிரியான பாதிப்புகள் தென்படவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் ஆா்.நல்லகண்ணு, தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா். அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது.
ஜிஎஸ்டியை உயா்த்தியதும், தற்போது குறைப்பதாகக் கூறுவதும் மத்திய அரசுதான். இவ்வளவு நாள்களாக மக்கள் பாதிக்கப்பட்டது இப்போதுதான் அவா்களுக்கு தெரிய வந்திருக்கிறது என்றாா் அவா்.