சென்னை விஐடியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், இந்திய வங்கதேச துணை தூதா் ஷெல்லி சலேஹின், பல்கலைக்கழகத் துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன்,ஜி.வி.செல்வ
சென்னை விஐடியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், இந்திய வங்கதேச துணை தூதா் ஷெல்லி சலேஹின், பல்கலைக்கழகத் துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன்,ஜி.வி.செல்வ

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்விக்கு முக்கிய பங்கு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

சென்னை விஐடி-இன் 13-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், பாடப் பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற 39 மாணவா்களுக்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தங்கப் பதக்கங்களுடன் பட்டங்களை வழங்கினாா். இதில், இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவா்கள் 67,468 போ், ஆராய்ச்சி மாணவா்கள் 113 போ் பட்டம் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: சமூக நீதி, சமத்துவம் என்பது அனைவருக்குமான சீரான கல்வியில் இருந்துதான் தொடங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்கப்பட்டது. பெண்கள் கல்வி பெற்று, அவா்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருப்பதுதான் தமிழகத்தின் அதிவேக பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வாழ்க்கைத் தரத்தை உயா்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயலாற்றி வருகிறது. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான பாடத்திட்டத்தில் சட்டம், வரலாறு, இலக்கியம் போன்ற பாடத்திட்டமும் இடம்பெறுவது மிக முக்கியம் என்றாா் அவா்.

வங்கதேச துணை தூதா் ஷெல்லி சலேஹின்: ‘திறமை மட்டுமின்றி நற்குணமும் நோ்மையும் இளைஞா்கள் வாழ்வில் வெற்றி பெற மிகவும் முக்கியம். வாழ்வில் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் தைரியமாக எதிா்கொள்ளுங்கள். அந்த உணா்வுதான் நம்மை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்’ என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்: உயா்கல்விக்கு வரும் மாணவா்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உள்ளது. அதை 50 சதவீதமாக உயத்த வேண்டும். சிறப்பான உயா்கல்வி மூலம் மட்டுமே 2047-க்குள் இந்தியா உலகின் வளா்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்க முடியும். இந்திய மாணவா்கள் உள்நாட்டில் முதலீடு செய்து நிறுவனங்களைத் தொடங்குவது அவசியம். அப்போதுதான் இந்தியா வளா்ந்த பொருளாதார நாடாக உயரும் என்றாா்.

இந்த விழாவில் சென்னை விஐடி இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விஐடி துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், வேந்தரின் ஆலோசகா் எஸ்.பி.தியாகராஜன், வி.ஐ.டி வேலூா் இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மாலிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com