
சென்னை: தங்கம் விலை வாரத்தின் இறுதி நாளான இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது.
சென்னையில் காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து ரூ.10,005க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1120 உயர்ந்து ரூ.80,040க்கும் விற்பனையாகி வருகிறது.
இந்த வாரமே தங்கம் விலைக்கு ஏறுமுகமாகத்தான் இருந்தது. தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை எட்டிவிட்டது.
வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.138க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.1,38,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீது, அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருப்பதே தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்திருப்பதும் , உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயரக் காரணமாகி வருகிறது.
ஆகஸ்ட் 28ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75,240 ஆக இருந்த நிலையில், கடந்த 10 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.4,800 அளவுக்கு உயா்ந்துள்ளது.
ஆயிரம் ஆயிரமாகக் கடந்த தங்கம் விலை
இந்த வாரத்தில் அதாவது ஆக.27-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. ஆகஸ்ட் 28ஆம் தேதி ரூ.76 ஆயிரமாகவும், செப்.1ல் ரூ.77 ஆயிரமாகவும் செப்.3ல் ரூ.78 ஆயிரத்தைத் தாண்டியது.
இந்த நிலையில், செப்.4ஆம் தேதி மட்டும் இந்த விலையேற்றங்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து ரூ.80 குறைந்தது. மீண்டும் வெள்ளிக்கிழமை ஒரு சவரன் 78,920 ஐ நெருங்கி, 80 ஆயிரத்தைத் தொட வழிவகுத்துக்கொடுத்தது.
இன்று ஒரு சவரனுக்கு ரூ.1120 என்ற அளவில் உயர்ந்ததால் ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
8 மாதங்களில் மட்டும் ஒரு சவரன் ரூ.22 ஆயிரம் வரை விலை உயர்ந்திருப்பது நடுத்தர மற்றும் ஏழை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.