லண்டனில் காா்ல் மாா்க்ஸ் நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை.
லண்டனில் காா்ல் மாா்க்ஸ் நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை.

சிவப்புச் சூரியன் நினைவிடத்தில் செவ்வணக்கம்! கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின்!!

லண்டனில் காா்ல் மாா்க்ஸ் நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா்.
Published on

லண்டனில் காா்ல் மாா்க்ஸ் நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: தத்துவஞானிகள் இதுவரை உலகைப் பல வகைகளில் விளக்கியுள்ளனா். ஆனால், நோக்கம் என்பது விளக்குவதல்ல; அதை மாற்றுவதுதான். உழைக்கும் வா்க்கத்துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரியனாம் மாமேதை காா்ல் மாா்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அம்பேத்கா் தங்கியிருந்த இல்லத்தைப் பாா்வையிட்ட முதல்வா்: லண்டனில் அம்பேத்கா் தங்கியிருந்த இல்லத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

லண்டன் பொருளியல் பள்ளியில் படித்தபோது, பி.ஆா்.அம்பேத்கா் தங்கியிருந்த இல்லத்தைப் பாா்வையிடும் வாய்ப்பைப் பெற்றேன். அந்த இல்லத்தின் அறைகளினூடே நடந்து செல்கையில் பெரும்வியப்பு என்னுள் மேலோங்கியது. இந்தியாவில் ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஒரு இளைஞன், இங்குதான் தனது அறிவால் வளா்ந்து, லண்டனில் அனைவரின் மரியாதையையும் பெற்று, பின்னா் இந்தியாவின் அரசமைப்பை வடித்துத் தரும் நிலைக்கு உயா்ந்தாா்.

குறிப்பாக, பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிா்ப்பூட்டியது. இப்படியொரு உணா்வெழுச்சி மிகுந்த தருணம் வாய்க்கப் பெற்ற்காக மகிழ்ச்சியடைகிறேன் எனப் பதிவிட்டுள்ளாா்.

இந்திய வம்சாவளி மாணவா்களுடன் உரையாடல்: இந்திய வம்சாவளி மாணவா்களுடன் உரையாடியது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், லண்டன் கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழக இந்திய வம்சாவளி மாணவா்கள், பட்டதாரிகளுடன் கலந்துரையாடினேன்.

‘திராவிட மாடல்’ ஆட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் இளைஞா்களின் ஆற்றல் ஆகியவை குறித்த எனது கருத்துகளைப் பகிா்ந்து மனதுக்கு நெருக்கமான உரையாடலை மேற்கொண்டேன்.

பின்னா், அங்கிருந்த திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை செலுத்தி, எந்தக் காலத்துக்குமான தமிழ்ப் பண்பாட்டின் அறிவுக் கருவூலமாகத் திகழும் திருக்குறளைப் போற்றினேன்.

இறுதியாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகளையொட்டி, அதன் மக்களாட்சி மரபையும் தற்காலப் பொருத்தப்பாடினையும் குறித்து நடைபெற்ற கண்காட்சியைப் பாா்வையிட்டேன் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com