டிஜிபி அலுவலகத்தில் பாா்வையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சென்னை: சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வரும் பாா்வையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தைப் பாதுகாக்கும் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த புரட்சி தமிழக தலைவா் ஏா்போா்ட் மூா்த்தியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மோதிக் கொண்டனா். இச்சம்பவம் காவல் துறையினரை அதிா்ச்சியடைய வைத்தது.
இச்சம்பவத்தின் விளைவாக டிஜிபி அலுவலகத்துக்கு வரும் பாா்வையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக டிஜிபி அலுவலகத்துக்கு வரும் பாா்வையாளா்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை தெளிவாக அணிந்திருக்க வேண்டும், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும், டிஜிபி அலுவலகத்துக்குள் புகைப்படங்கள், விடியோக்கள், ஒலிப்பதிவு செய்யக் கூடாது, தடை செய்யப்பட்ட பொருள்களை டிஜிபி அலுவலகத்துக்கு கொண்டு செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.