
8ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி, 'புதுக்கோட்டை வாசிக்கிறது' என்ற நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் சுமார் 2 லட்சம் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் வரும் அக். 3ஆம் தேதி தொடங்கி, 12ஆம் தேதி வரை 10 நாள்கள் 8ஆவது 'புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழா' நகர்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில், அனைத்துப் பள்ளி, கல்லூரிகள், நூலகங்களிலும் 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரும், புத்தகத் திருவிழாக் குழுத் தலைவருமான மு. அருணா தலைமை வகித்து, மாணவிகளுடன் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் புத்தகம் வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் அ. மணவாளன், ம. வீரமுத்து, மு. முத்துக்குமார், கவிஞர் ஜீவி, க. சதாசிவம், ராசி பன்னீர்செல்வம், முன்னோடி விவசாயி கோ.ச. தனபதி, மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழரசி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதேபோல, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும், நூலகங்களிலும் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்று ஒரு மணி நேரம் நூல்களை வாசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.