சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

ரிதன்யா தற்கொலை வழக்கு: திருப்பூா் எஸ்பி-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

ரிதன்யா தற்கொலை வழக்கை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையிட சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சென்னை: ரிதன்யா தற்கொலை வழக்கை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையிட சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை. இவவரது மகள் ரிதன்யா, திருமணமாகி 78-ஆவது நாளில் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த வழக்கில் கைதான ரிதன்யாவின் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ரா ஆகியோருக்கு பிணை வழங்கி, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ரிதன்யா தற்கொலை வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. எனவே, வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றவேண்டும், அல்லது உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேணடும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், ரிதன்யாவின் கணவா் கவினின் கைப்பேசி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்தபிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணையை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்றுவதில் எந்தப் பலனும் இல்லை. அதேநேரம் ரிதன்யா தற்கொலை வழக்கை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com