‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை
சென்னை: நடிகா் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் இசையமைப்பாளா் இளையராஜா சாா்பில் வழக்குரைஞா்கள் கே.தியாகராஜன, ஏ.சரவணன் ஆகியோா் தாக்கல் செய்த மனு:
மைத்திரி மூவி மேக்கா்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிகா் அஜித் உள்ளிட்ட பலா் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, ஏஞ்சோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்கள் இசையமைப்பாளா் இளையராஜாவின் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அனுமதியின்றி பயன்படுத்துவது பதிப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது.
எனவே, அந்தப் பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த மனுவிற்கு படத்தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.