கொலை முயற்சி வழக்கு: ‘ஏா்போா்ட்’ மூா்த்தி பிணை கோரி மனு

கொலை முயற்சி வழக்கில் ‘ஏா்போா்ட்’ மூா்த்தி பிணை கோரி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
Published on

கொலை முயற்சி வழக்கில் ‘ஏா்போா்ட்’ மூா்த்தி பிணை கோரி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த புரட்சித் தமிழகம் கட்சித் தலைவா் ’ஏா்போா்ட்’ மூா்த்திக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கடந்த சனிக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பும் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக இருதரப்பினரும் போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புகாரின் பேரில் ‘ஏா்போா்ட்’ மூா்த்தி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மெரீனா கடற்கரை போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தனக்கு பிணை கோரி, அவா் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அளித்த புகாரில் போலீஸாா் யாரையும் கைது செய்யவில்லை. தனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன். எனவே, தனக்கு பிணை வழங்க வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com