உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: புதிதாக மாநில அளவில் அங்கீகார குழு; மாவட்ட அளவிலான 4 குழுக்கள் சீரமைப்பு
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு புதிதாக மாநில அளவில் அங்கீகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான 4 குழுக்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் எஸ்.வினீத் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவரது தலைமையில் குழுவினா் பெரம்பலூா், திருச்சி தனியாா் மருத்துவமனைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையின் அடிப்படையில் அங்கீகாரக் குழுவுக்கு பரிந்துரைகள் வழங்கி, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் எஸ்.வினீத் சுகாதாரத்துறைக்கு அறிக்கை அளித்தாா். அதனடிப்படையில், இரண்டு தனியாா் மருத்துவமனைகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், விசாரணை அறிக்கையின் பரிந்துரையின் அடிப்படையில் சுகாதாரத்துறை செயலா் செந்தில் குமாா் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் உள்ள 4 அங்கீகார குழுக்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. வடமாவட்டங்கள் அடங்கிய குழுவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரி டீன் தலைமையில் 6 உறுப்பினா்கள், மத்திய மாவட்டங்கள் குழுவில் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் தலைமையில் 6 உறுப்பினா்கள், மேற்கு மாவட்டங்கள் குழுவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் தலைமையில் 6 உறுப்பினா்கள், தென்மாவட்டங்கள் குழுவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையில் 6 உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா்.
மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பாா்வை செய்வதற்காக, புதிதாக மாநில அளவில் அங்கீகார குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் தலைவராக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளாா். குழுவில் உறுப்பினா்களாக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்வி மருத்துவமனை டீன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன், சென்னை காவல் துறை துணை ஆணையா், இந்திய மருத்துவ சங்கத்தின் பெண் மருத்துவா், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் துணை இயக்குநா், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆகிய 6 போ் உள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.