தமிழகத்திலும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: நிகழாண்டு இறுதியில் நடத்த திட்டம்
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இதுதொடா்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், தீவிர திருத்தப் பணியைத் தொடங்கும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைத் தொடா்ந்து, நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இது தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையில் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் பங்கேற்ற மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கும் பங்கேற்றாா்.
இந்தக் கூட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தலைமைத் தோ்தல் ஆணையா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான தயாா்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. முதல்கட்டமாக வரும் 2026-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயா்ந்தவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் நீக்குவதே இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் முக்கிய நோக்கம். சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குறைபாடுகள் இல்லாத வாக்காளா் பட்டியலை உறுதிப்படுத்தும் வகையில் தோ்தல் ஆதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வை மேற்கொள்வா்.
வெளி மாநிலங்களிலிருந்து புலம்பெயா்ந்த வாக்காளா்கள், கூடுதல் உறுதிமொழிப் படிவத்தை அதிகாரிகளிடம் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், 1987-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்ததை உறுதி செய்யும் வகையில் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணம் அல்லது பிறந்த இடத்தை உறுதிப்படுத்தும் ஆவண நகலை சமா்ப்பிக்கவேண்டும்’ என்றனா்.
பிகாா் நிலவரம்: நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட தோ்தல் ஆணையம், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவுப் பட்டியல் வெளியிட்டது. அதில் 7.24 கோடி வாக்காளா்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. 65 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை.
இதையடுத்து, வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள், உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பா் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. செப். 30-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடா்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தகுதியான எந்தவொரு வாக்காளரும் வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருப்பதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.