

நடிகரும், தவெக தலைவருமான விஜய், செப். 13ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கும் நிலையில், திருச்சியில் தவெக பிரசாரத்துக்கு காவல்துறை 23 நிபந்தனைகள் விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தவெக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், திருச்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்க விருக்கிறார் கட்சித் தலைவர் விஜய்.
இதற்காக தவெக சாா்பில் முதலில் அனுமதி கோரப்பட்ட சத்திரம் பேருந்து நிலைய பகுதியை திருச்சி மாநகரக் காவல் துறை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்ததால், மரக்கடை பகுதியைத் தோ்வு செய்துள்ளனா்.
இதுதொடா்பாக திருச்சி வடக்கு காவல் துணை ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் காவல்துறை தரப்பில் முக்கியக் கோரிக்கையாக வாகன நிறுத்தும் இடங்களைத் தோ்வு செய்து தரக் கூறப்பட்ட நிலையில் ஸ்டாா் திரையரங்கு, மேலரண்சாலை, காந்திசந்தை என மூன்று இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தவும், சாலையில் வரக்கூடிய வாகனங்கள் நிறுத்த தற்காலிகமான வாகன நிறுத்த மையங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை மீண்டும் நடத்திய பேச்சுவாா்த்தையில் 3 இடங்களில் வாகன நிறுத்தும் இடங்களை தாங்களே பராமரித்துக் கொள்வதாக தவெக நிா்வாகிகள் கூறியதையதை ஏற்று, காவல்துறை அனுமதி அளித்தது.
மேலும், அவசர நேரத்தில் சமாளிக்க தன்னாா்வலா்கள் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நான்கு ஆம்புலன்ஸ் போன்றவற்றைத் தயாா் செய்து தருவதாகக் காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவாா்த்தையை இருதரப்பும் ஒப்புக் கொண்டதில், பிரசாரத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்.13ஆம் தேதி திருச்சியில் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கும் விஜய் சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்ய அனுமதி கோரப்பட்ட நிலையில், அது தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.
முதலில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரசாரத்துக்கு அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும், பிரசாரத்தால் நெரிசல் ஏற்படும் என்பதால் அங்கு பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு, திருச்சி மரக்கடை என்ற இடத்தில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
தொடர்ந்து, இன்று காலையும் தவெகவினருடன் திருச்சி மாநகர காவல்துறையினர், பேசும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம், தீயணைப்பு மற்றும் அவசரகால ஊர்திகள் செல்ல வழி உள்ளிட்டவிவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது, திருச்சியில் மரக்கடை என்ற பகுதியில் பிரசாரம் செய்ய காவல்துறை இடம் ஒதுக்கியிருப்பதாகவும், 23 நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருச்சி மாநகர காவல்துறை விதித்த 23 நிபந்தனைகளில்,
பேசும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தை விட்டு வெளியே வரக் கூடாது.
பிரசார வாகனத்தின் மீது நின்றுகொண்டு, சாலை வலம் செல்ல அனுமதி மறுப்பு.
விஜய் வாகனத்தின் பின்னால் அதிக அளவில் வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுப்பு. 5 அல்லது 6 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும்.
விஜய் பிரசார வாகனத்தில் அமர்ந்தபடியே வர வேண்டும். நின்றுகொண்டு சையை அசைத்தபடி வரக்கூடாது.
அனுமதி அளிக்கப்படும் இடங்களில் விஜய் 25 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது.
செப்.13 அன்று முற்பகல் 10.30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பேச அனுமதி.
பெரிய குச்சிகளில் இணைக்கப்பட்ட கொடிகளைக் கொண்டு வரக் கூடாது.
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளை கூட்டத்துக்கு அழைத்துவரக் கூடாது.
தீயணைப்பு மற்றும் மருத்துவ உதவிகளையும் தவெக செய்திருக்க வேண்டும்.
மக்கள் மற்றும் வணிகர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் பிரசார திட்டத்தின் அடிப்படையில், நடிகா் விஜய் பிரசாரம் செய்வதற்காக, காவல்துறை அனுமதி கோரி, அந்தந்த மாவட்ட காவல்துறையினரிடம் அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.
திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைகயில் விஜய் சுற்றுப் பயணத்துக்கு காவல்துறை விதித்த நிபந்தனைகள் ஏற்க தவெகவினர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சியில் தவெக தலைவா் பிரசாரத்துக்கு ஆளுங்கட்சியின் தலையீட்டால் பல்வேறு இடையூறுகள் வருவதாக தவெக தொண்டா்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமைச்சா் கே.என். நேரு கூறியதாவது:
தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு மரக்கடையில் அனுமதி அளித்துள்ளதற்கு காவல்துறை மீது குற்றம் சுமத்த முடியாது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிா்க்கட்சியாக இருந்தாலும் காவல்துறை முறையாக அனுமதி வழங்குகிறது. நாங்கள் விஜய் பிரசாரத்துக்கு இடையூறு செய்து என்ன செய்யப் போகிறோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.