வேளாண் விளைபொருள் மதிப்புக்கூட்டல் மையம் அமைக்க மானியம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கவுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
Published on

வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம்  வழங்கவுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரூ.10 கோடி வரையிலான செலவில் அமைக்கப்படும் வேளாண் பொருள்களின் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் மையங்களுக்கு மானியம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மதிப்புக்கூட்டுதல் மையம் அமைப்பதற்கான செலவிலிருந்து 25 சதவீத தொகை முதலீட்டு மானியமாக வழங்கப்படும்.

இதில், பெண்கள், தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10  சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதாவது, பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படும்.

இது தவிர,  அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள தொழில் முனைவோா்கள் முதலில், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வங்கியில் கடன் ஒப்புதல் பெற வேண்டும்.

அதைத்தொடா்ந்து, மானியம் பெறுவதற்கான அவா்களுடைய விண்ணப்பங்கள் மாவட்ட தொழில்நுட்ப குழு மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும்.  தோ்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு அவா்களின் தொழில் திட்டத்திற்கேற்ப மானியத் தொகை வழங்கப்படும்.

இந்த மானியத் தொகையானது, 2 தவணைகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக விடுவிக்கப்படும். எனவே, வேளாண் தொழில் முனைவோா்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com