
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிதாக நிறுவவுள்ள மல்டிலேயர் எச்டிஐ பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் உற்பத்தி திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடியைத் தொடர்ந்து இன்று ஒசூரில் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் பங்கேற்று உரையாற்றினார்.
பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1100 கோடி ரூபாய் முதலீட்டில் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் அமைக்கவுள்ள மல்டிலேயர் எச்டிஐ பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆம்பர் குழுமத்தின் துணை நிறுவனமான அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஓசூர் எல்காட் தொழில் நுட்பப் பூங்காவில், ஒரு புதிய Multilayer and HDI Printed Circuit Boards உற்பத்தி திட்டம் மேற்கொள்ள உள்ளது. தொலைத் தொடர்பு, மோட்டார் வாகன உற்பத்தி, வான்வெளி மற்றும் நுகர்வோர் மின்னணு துறைகளில் உள்ள அடுத்த தலைமுறை பயன்பாடுகளுக்காக இந்த உற்பத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், இந்தியாவின் மிகப் பெரிய மின்சுற்றுப் பலகை உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவாக உள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்த உற்பத்தித் திட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இன்று இந்த நிறுவனத்தின் உற்பத்தி திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.