சுரங்கம் தோண்ட பொதுமக்கள் கருத்து தேவையில்லையா? மத்திய அரசுக்குத் தலைவர்கள் கண்டனம்!

30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்ற அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
பிரதிப் படம்
பிரதிப் படம்X | M.Thamimun Ansari
Published on
Updated on
2 min read

டங்க்ஸ்டன் மற்றும் அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கங்களுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவு, மாநிலங்களின் உரிமையையும், மக்களின் ஜனநாயக உரிமையையும் பறிக்கும் செயல் ஆகும். எந்தவொரு சுரங்கத் திட்டமும் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அத்தகைய திட்டங்களை செயல்படுத்தும்முன், பொதுமக்களின் கருத்தை கேட்பது அரசின் முக்கிய கடமையாகும்.

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டமும், கன்னியாகுமரி கிள்ளியூரில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டமும் மக்களின் எதிர்ப்பால் தடைசெய்யப்பட்டன. இது போன்ற அனுபவங்களிலிருந்தே மத்திய அரசு இப்போது மக்களிடமிருந்து கருத்து கேட்கும் உரிமையையே பறித்து விட முயல்கிறது.

அணுக் கதிர்வீச்சு காரணமாக புற்றுநோய், சிறுநீரக நோய், கருச்சிதைவு, தோல் நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், அணுக்கனிமச் சுரங்கங்களை மக்கள் விருப்பமின்றி அமைப்பது அப்பகுதி மக்களின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தலாகும்.

அதேபோல், பிற கனிமச் சுரங்கங்கள் விவசாயம், குடிநீர், வேலைவாய்ப்பு, இயற்கை சூழல் ஆகியவற்றை சீரழிக்கும். எனவே, மக்களிடமிருந்து கருத்து கேட்காமல் சுரங்க அனுமதி வழங்கும் மத்திய அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அன்புமணி வெளியிட்டுள்ள பதிவில்,

டங்க்ஸ்டன், அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு: மத்திய அரசு ஆணை திரும்பப் பெறப்பட வேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்புக்கும்,வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் உரிமைப் பறிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, எந்தவொரு திட்டத்தையும் ஏற்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து கருத்து தெரிவிக்க மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் பறிக்கும் செயலாகும். இதை ஏற்க முடியாது.

மத்திய அரசு பிறப்பித்துள்ள ஆணையின்படி டங்ஸ்டன் சுரங்கம், கிள்ளியூர் அணுக்கனிம சுரங்கம் ஆகியவற்றை மக்களின் கருத்துகளையோ, மாநில அரசின் கருத்துகளையோ கேட்காமல் அமைத்து விட முடியும். அணுக்கனிம சுரங்கங்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை அணுக்கதிர்வீச்சு ஆபத்துக்கும், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட நோய் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அதேபோல், பிற சுரங்கங்கள் மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும். மக்களைக் காக்க வேண்டிய அரசே இதை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள பதிவில்,

கனிம வளங்களை கண்டறிவதற்கும், அது தொடர்பாக சுரங்கங்களை தோண்டுவதற்கும் இனி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப் போவதில்லை என பாஜக கூட்டணி அரசு முடிவு எடுத்திருப்பது அவர்களின் சுரண்டல் அரசியலை வெளிப்படுத்துகிறது.

இதனால் மலைவாழ் மக்களும், விவசாயிகளும் மட்டுமல்ல. சுற்றுச்சூழலும் பேரழிவுக்கு ஆளாகும். மலையக கார்ப்பரேட் திருடர்களுக்கு துணைப் போகும் இம்முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Leaders flay BJP govt. notification exempting critical mineral mining from public consultation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com