
பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டு, ஜனநாயகப் படுகொலை செய்வதாக அரியலூரில் நடைபெற்ற பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
இரவு 8.45 மணியளவில் அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள இடத்தில் தமது வாகனத்தின் மேலேறி நின்றபடி மைக் பிடித்த விஜய், தாமதமாக வந்தடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டபின் தமது உரையைத் தொடங்கினார்.
அவர் பேசும்போது, “நம்மை மேலேயும் கீழேயும் மோசமாக ஆட்சி செய்யும் பாசிச பாஜக அரசையும், விஷமத் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இந்த பாஜக அரசு கொஞ்சம்போல கொடுமைகளைச் செய்கிறது?
பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் காணோமாம்! எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் ‘வாக்குத் திருட்டு!’
வீட்டு விலாசம் ‘0’ என்று குறிப்பிட்டெல்லாம் வாக்காளர் அடையாள அட்டை கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய மோசமான வேலைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.
அடுத்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்!’
2029-இல் இவர்களுடைய ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்பது எல்லோருக்குமே தெரிந்தவொரு விஷயம்தான். இதனால், மாநில அரசுகளையெல்லாம் கலைத்துவிட்டு, எல்லா மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக தேர்தல் நடத்தும் எண்ணமே இது.
அப்போதுதானே ஒரே நேரத்தில் இந்த மாதிரியான தில்லுமுல்லு வேலைகளை எளிதாகச் செய்ய முடியும்! இதற்குப் பெயர் ‘ஜனநாயகப் படுகொலை!’ தொகுதி மறுவரையறை செய்வதன் மூலமாக தென்னிந்தியாவின் பிரதிநிதுத்துவத்தைக் குறைக்க நினைப்பது, ஒட்டுமொத்த இந்தியவுக்கும் பாஜக செய்யும் துரோகம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.