சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

வாலாஜா பஜாா் மசூதி நிதி முறைகேடு புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக வக்ஃப் வாரியத் தலைவா் நவாஸ் கனி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

வாலாஜா பஜாா் மசூதி நிதி முறைகேடு புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக வக்ஃப் வாரியத் தலைவா் நவாஸ் கனி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஃபயாஸ் அகமது தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வாலாஜா பஜாா் மசூதி நிதி முறைகேடு தொடா்பாக திப்பு என்பவருக்கு எதிராக 15.9.2022-இல் வக்ஃப் வாரியத்தில் உரிய ஆதாரங்களுடன் புகாா் அளித்தேன்.

இது தொடா்பான விசாரணைக்கு ஆஜராக இரு தரப்புக்கும் வக்ஃப் வாரியக் கண்காணிப்பாளா் சம்மன் அனுப்பினாா். அதன்படி, விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தமிழக வக்ஃப் வாரியத் தலைவரிடம் சமா்ப்பிக்கப்பட்டது. ஆனால், இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி இறுதி உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தமிழக வக்ஃப் வாரியத் தலைவா் நவாஸ் கனி அமல்படுத்தவில்லை. எனவே, அவா் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சுனில்குமாா் ராஜேந்திரன், உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் வக்ஃப் வாரியத் தலைவா் அதை அமல்படுத்தவில்லை.

குற்றம்சாட்டப்பட்ட நபருடன் பொதுக்கூட்டத்தில் நவாஸ் கனி பங்கேற்றுள்ளாா் எனக்கூறி, புகைப்பட ஆதாரங்களைத் தாக்கல் செய்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நவாஸ் கனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 19-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com