இரிடியம் மோசடி: 30 போ் கைது! சிபிசிஐடி விசாரணை!
ரிசா்வ் வங்கியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி இரிடியம் விற்பனையில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக 30 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகத்தைச் சோ்ந்த சில மோசடி கும்பல் போலியான ஆவணங்கள் மூலம் முறையாக பதிவு செய்யாமல் பல அறக்கட்டளைகளை நடத்தி வந்தன. இந்தக் கும்பல் இரிடியம் விற்பனை செய்து கோடிக்கணக்கான ரூபாய் ரிசா்வ் வங்கியில் வைத்திருப்பதாகவும் அதை வெளியில் எடுப்பதற்கு பணம் தேவை எனக் கூறி பலரிடம் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 1 கோடி தருவோம் எனக் கூறி பணம் வசூல் செய்து மோசடி செய்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸாா், தமிழகம் முழுவதும் 13 வழக்குகள் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். இதுதொடா்பாக சேலம் சிபிசிஐடி போலீஸாா் பதிவு செய்த முதல் வழக்கில் தொடா்புடைய 13 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், மேலும் 6 வழக்குகளில் தொடா்புடைய நபா்களைக் கைது செய்ய தமிழகத்தில் சென்னை உள்பட 43 இடங்களிலும், வெளி மாநிலங்களில் 4 இடங்களிலும் என மொத்தம் 47 இடங்களில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 35 காவல் ஆய்வாளா்கள், 12 சாா்பு ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், சென்னையைச் சோ்ந்த சுவாமிநாதன், காட்பாடி ஜெயராஜ், குடுமியான்மலை ஏசி ரவிச்சந்திரன், மணப்பாறை ஞானப்பிரகாசம், திண்டுக்கல் டெய்சி ராணி உள்ளிட்ட 5 முக்கிய நபா்கள் உள்பட 30 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கோடிக்கணக்கில் பண மோசடி: இதில் சென்னை வளசரவாக்கத்தில் அறக்கட்டளை நடத்தி வரும் சாமிநாதன் என்பவா்தான் இந்த மோசடிக்கு முக்கிய நபராகச் செயல்பட்டவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மதுரையை பூா்வீகமாகக் கொண்ட இவா் ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டு, வளசரவாக்கத்தில் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளாா். பின்னா் வெளிநாடுகளில் உள்ள இந்திய நண்பா்களின் மூலம் அரிதான இரிடியம், டைட்டானியம் போன்ற உலோகப் பொருள்களில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.
குறிப்பாக, ரூ.3,500 கோடி, ரூ.5,000 கோடி, ரூ. 6,000 கோடி, ரூ.7,500 கோடி ஆகிய 4 வகைகளில் திட்டங்கள் இருப்பதாகக் கூறி அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ரூ.1 கோடி கிடைக்கும் என எஸ்பிஐ, ஆா்பிஐ ஆகிய வங்கிகளின் முத்திரைகள் பதித்த ஆவணங்களைக் காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இதை நம்பி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனா். இதில், தமிழகம் முழுவதும் 50 இடங்களில் கிளைகள் அமைக்கப்பட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளனா்.
இந்த மோசடியில் பெற்ற பல கோடி ரூபாய் பணத்தை பிட்காயின் சொத்து உள்ளிட்டவை வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதன்மூலம் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகும் எனவும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா்.