விஜய் வெளியே வரமாட்டான் என்றவர்கள் புலம்புகிறார்கள்..! தவெக தலைவரின் புதிய கடிதம்!

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள புதிய கடிதம் குறித்து...
தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய்.ENS
Published on
Updated on
2 min read

தவெக தலைவர் விஜய் புதிய அறிக்கையை வெளியிட்டு அதில் தனது பயணத்துக்கு வந்தக் கூட்டத்தைப் பார்த்து பலரும் பலவிதமாக புலம்பி வருவதாகக் கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியிலிருந்து சனிக்கிழமையில் தொடங்கினார். மக்கள் வெள்ளத்தில் மிதந்துச் சென்றார்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து, மரக்கடை வரை 7 கி.மீ. தொலைவுக்கு விஜய் பிரசார வாகனம் வந்து சேர 5.30 மணிநேரத்துக்கும் மேலாகியது.

பின்னர் அங்கிருந்து பெரம்பலூருக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த விஜய், பிரசாரம் செய்யாமல் சென்றதற்கு காலையில் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.

நமது மதுரை மாநாட்டில் அறிவித்ததைப் போலவே, "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய், நான் வரேன்" என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் நேற்று (செப்.13) தொடங்கினோம்.

எளிதாகக் கடந்துவிடும் தூரத்தைக்கூட மக்கள் கடலில் பல மணிநேரம் நீந்தியே கடக்க வேண்டிய சூழல் இருந்தது என்பதை நாடும் நன்றாகவே உணர்ந்தது. இதையே நமது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும் இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர்.

கதறல், புலம்பல்...

‘விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான்' என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோர், இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர். இதை முன்கூட்டியே ஒப்புக்கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்கிற கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர்.

புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும்தானே பழந்தமிழ் மரபு? இன்னும் என்னென்னவோ வெறுப்பையும் விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் அக்கடிதத்தில் அழுதுகொண்டிருந்தன.

வெளியே கொள்கை, கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜகவோடு உறவாடுவதும் யார் என்று மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே, கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக்கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?

தமிழகம் தாண்டியும் புத்தெழுச்சி

பொய் வாக்குறுதிகளை அள்ளி அள்ளித் தெளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, கேள்வி கேட்டுத் தங்களது உரிமைகளுக்காகப் போராட வரும் அதே சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுபவர் யார் என்றும் தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?

தமிழகம் தாண்டியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உருவாகி இருக்கும் தன்னெழுச்சியான புத்தெழுச்சி, இப்போது அவர்களை ஏகத்துக்கும் குமுற வைத்துள்ளது. பொதுமக்களுக்கு இவர்கள் செய்யும் இடையூறுகள் அனைத்தையும் பற்றி, மக்களே கேள்வி கேட்கத்தொடங்கியுள்ளனர் என்றார்.

சில கேள்விகளைப் பட்டியிலிட்ட பிறகு அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மாபெரும் மக்கள் சக்தியுடன் வந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையும் 'அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்' என்றும் 'வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக்கொண்டிருப்பவர்' என்றும் தங்கள் மனத்தில் மண்டிக் கிடந்த வெறுப்பு நெருப்பைக் கக்கியவர்கள்தானே இவர்கள்? அன்றே இவர்கள் இப்படித்தான். இன்று மட்டும் மாறிவிடுவார்களா?

நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்

மாபெரும் மக்கள் சக்தி, பெண்கள் சக்தி மற்றும் இளைஞர் சக்தியுடன் மக்களரசியலில் முதன்மைச் சக்தியாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் எப்படிக் குறைகூறாமல் இருப்பார்கள்?

யார் எத்தனைக் கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பைக் கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய அடிப்படைக் கோட்பாட்டோடு, மதச்சார்பற்ற சமூக நீதி என்ற மகத்தான கொள்கையோடு பாதை வகுப்போம். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கொள்கை வழிகாட்டுதலுடன் வெற்றிநடை போடுவோம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் 1967, 1977 தேர்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றி விளைவை மக்கள் சக்தியின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் நிகழ்த்திக் காட்டும். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் எனக் கூறியுள்ளார்.

Summary

TVK leader Vijay has released a new statement and said that many people are complaining envy about his journey.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com