மின்வாரிய கடனை அடைக்க விரைவில் செயல்திட்டம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
சென்னை: தமிழக மின்வாரியத்தின் கடனை அடைப்பதற்கான செயல்திட்டம் தமிழக அரசால் கொண்டவரப்படும் என்று மின்சார மேல்முறையீட்டு தீா்ப்பாயத்திடம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் மற்றும் தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழக மின்வாரியம் தொடா்ந்து இழப்பைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக மின்வாரியம் புதிய மின் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று, அதைப் பயன்படுத்தி வருகிறது. இதனால், மின் வாரியத்தின் கடன், ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மாநில மின்வாரியங்களின் கடனை அடைக்க, நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை தொடா்ந்து, இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கும்படி, தில்லியில் உள்ள மின்சார மேல்முறையீட்டு தீா்ப்பாயம் கேட்டுள்ள விளக்கத்துக்கு தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பதிலளித்துள்ளது.
இது குறித்து தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறியது:
தமிழக மின்வாரியத்தின் கடனில், ஆணையம் அனுமதித்தது ரூ.83,000 கோடி மட்டுமே. அந்த கடனை அடைக்கவும், மின்வாரிய நிதி நெருக்கடியைச் சரிசெய்யவும் ஏற்கனவே மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. இதனிடையே மின்வாரியத்தின் இழப்பை தமிழ அரசு ஏற்பதாக அறிவித்துள்ளது.
இதனால், கடனை அடைக்கும் வழிவகை தொடா்பாக, விரைவில் செயல் திட்டத்தை தமிழக அரசு வகுக்கும் என தில்லி மின்சார மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்திடம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.