மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு
சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக காவல் துறையினா் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீ ட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகக் கூறி, மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின்பேரில், அவா் மீது சென்னை மாநகர இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா் நீதிமன்றம், விசாரணை என்ற பெயரில் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தரப்பில், மத ஒற்றுமையை சீா்குலைத்து சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் மதுரை ஆதீனம் பேசியதால்தான் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரின் விசாரணைக்கு அவா் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆதீனம் தரப்பில், போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படுகிறது. சிலா் சீருடையில்லாமல் வந்து விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அப்போதே முடிந்து போய் இருக்கும். நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் போலீஸாா் அரசியல் கண்ணோட்டத்துடன் வழக்குப்பதிவு செய்து பெரிதுபடுத்தியுள்ளதாக கருத்து தெரிவித்தாா்.
பின்னா் இந்த வழக்கின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை போலீஸாா் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அதுவரை மதுரை ஆதீனத்துக்கு எதிராக காவல் துறையினா் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவையும் நீட்டித்து உத்தரவிட்டாா்.