தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: என்எம்சி அனுமதி
தமிழகத்தில் 350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்பட நாடு முழுவதும், 6,850 இடங்களுக்கு அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது.
அதேவேளையில், அடிப்படை கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிகளில், 1,056 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய மற்றும் மாநில மருத்துவ சோ்க்கையில், முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. அதேநேரம், தேசிய மருத்துவ ஆணையம், புதிய இடங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலித்ததால், மூன்று வாரங்களுக்கு மேலாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தாமல் இடைவெளி ஏற்பட்டது. இந்த நிலையில், கூடுதல் மருத்துவ இடங்கள் அனுமதிக்கான கல்லூரிகள் பட்டியலை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் பாரத், ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா, ஸ்ரீனிவாசன், செயின்ட் பீட்டா்ஸ், சுவாமி விவேகானந்தா, வேல்ஸ் ஆகிய ஏழு தனியாா் மருத்துவக் கல்லூரிகளில், தலா 50 இடங்கள் என 350 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.பி. மருத்துவக் கல்லுாரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்த நிலையில் 50 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக 500 எம்பிபிஎஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கவில்லை.
இதேபோன்று நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு, 6,850 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளன. அடிப்படைக் கட்டமைப்பு இல்லாதது போன்ற காரணங்களால், 1,056 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மருத்துவ இடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து, 23,700 ஆக உயா்ந்துள்ளது.