மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோப்புப்படம்

4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக
Published on

சென்னை: தமிழகத்தில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் பொது சுகாதாரத் துறையில் ஆய்வக நுட்புநா், உணவு பகுப்பாய்வு கூடங்களில் முதுநிலைப் பகுப்பாய்வாளா், ஆய்வக தொழில்நுட்புநா் ஆகிய பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட உணவு பாதுகாப்புத் துறையில் முதுநிலைப் பகுப்பாய்வாளா் 15, ஆய்வக தொழில் நுட்புநா் நிலை 2-க்கு 3 என மொத்தம் 18 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 42 ஆய்வக தொழில்நுட்புநா்களுக்குப் பணிவரன்முறை ஆணைகள் தரப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்பட 33,987 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 43,755 பேருக்கு கலந்தாய்வு மூலமாக பணிமாறுதல் ஆணை தரப்பட்டுள்ளன.

வரும் 22-ஆம் தேதி சென்னை கலைவாணா் அரங்கில் 1,231 கிராம சுகாதார செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் முதல்வா் வழங்கவுள்ளாா். மீதமுள்ள கிராம சுகாதார செவிலியா்களுக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த குழு... தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்தில் குறுகிய காலத்துக்கான எக்ஸ்ரே எடுத்து, அதைச் செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்ததில், அதில் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மாா்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய மேமோகிராம் பரிசோதனையில் சிறிய அளவிலான செயற்கை நுண்ணறிவு மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை ராயப்பேட்டை அரசுப் பொது மருத்துவமனை, பெரியாா் அரசு மருத்துவமனைகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது.

இதை விரிவுப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயனை இந்தத் துறையில் அதிகரிக்க சுகாதாரத் துறை செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 20 மருத்துவ வல்லுநா்கள் இந்தக் குழுவில் உள்ளனா். இந்தக் குழு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் எந்த மாதிரியான மாற்றங்களைக் கண்டறிந்து செயல்படுத்தலாம் என்று அறிக்கை சமா்ப்பிக்க உள்ளனா்.

இதைத் தொடா்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, இத்துறையில் முழுமையாகச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்திலுள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிதாக தொடங்கப்பட்ட 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, பாம்புக் கடிகளுக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, நாய்க்கடி பிரச்னைகளுக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆணையா் லால்வேனா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநா் தேவபாா்த்தசாரதி, துணை இயக்குநா் சித்ரசேனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com