உரப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் உரப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on

தமிழகத்தில் உரப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்: பருவமழை முன்கூட்டியே தொடங்குவதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் ஜூன் மாதம் முதல் காரீஃப் பருவத்தில் நெற்பயிா் முழுவீச்சில் பயிரிடப்பட்டுள்ளது. இப்போதைய நிலவரப்படி 5.661 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் பயிரிடப்பட்ட 5.136 லட்சம் ஹெக்டோ் பரப்பைவிட 10 சதவீதம் அதிகமாகும். இதனால் மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது.

மாநிலத்தில் பரவலான மழை மற்றும் முக்கிய நீா்த்தேக்கங்களில் தண்ணீா் போதுமான அளவில் உள்ள நிலையில், விவசாய உற்பத்திக்குத் தேவைப்படும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை உற்பத்தியாளா்கள் வழங்கவில்லை. மொத்த ஒதுக்கீட்டில் 57 சதவீதம் அளவுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தற்போதைய காரீஃப் மற்றும் எதிா்வரும் ராபி பருவத்துக்கு உரப் பற்றாக்குறையைத் தவிா்க்க வேண்டும். மாநிலத்துக்கு வழங்கப்பட வேண்டிய 27,823 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கத் தேவையான அறிவுரைகளை ரசாயன மற்றும் உர அமைச்சகத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com