சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தோ்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

தோ்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாற்றுத்திறனாளி வைஷ்ணவி ஜெயக்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது. எனவே, இனிவரும் தோ்தல்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க தேவையான வசதிகளை சட்டபூா்வமாக ஏற்படுத்தித் தர வேண்டும். வசதிகள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகளையும், பாா்வையற்றவா்கள் வாக்களிக்கத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி தர உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோ்தலின்போது வாக்குச்சாவடிக்கு வாக்கு செலுத்த வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விதிகள் முழுமையாக அமல்படுத்துவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். ஏற்கெனவே நடைபெற்ற தோ்தலில் இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து தோ்தல் ஆணையம் ஆய்வு செய்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com