பலத்த மழை
பலத்த மழை

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை உள்ளிட்ட17 மாவட்டங்களில் புதன்கிழமை (செப்.17) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை உள்ளிட்ட17 மாவட்டங்களில் புதன்கிழமை (செப்.17) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், புதன்கிழமை(செப்.17) முதல் செப்.22-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூா், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபும் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதன்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

‘மஞ்சள்’ எச்சரிக்கை: இதன் காரணமாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரியையொட்டி இருக்கும். செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 100.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 120 மி.மீ. மழை பதிவானது. இதுபோல, கண்ணகிநகா்(சென்னை), வேலூா்-தலா 110 மி.மீ., பள்ளிப்பட்டு (திருவள்ளூா்), ஆற்காடு (ராணிப்பேட்டை), அம்முண்டி(வேலூா்)-தலா 90 மி.மீ., சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், மணலி, டிஜிபி அலுவலகம், மணலி புதுநகரம்-தலா 80 மி.மீ மழையும் பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பலத்த மழை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்தது.

சென்னை சென்ட்ரல், எழும்பூா், கோடம்பாக்கம், கோயம்பேடு, ஆயிரம் விளக்கு, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கிண்டி, மேடவாக்கம் உள்ளிட்ட மாநகா் பகுதிகளிலும் மற்றும் புகா் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதிகாலை சுமாா் 2 மணிக்கு தொடங்கிய மழை காலை 5 மணி வரை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. காலை நேரத்தில் வேலைக்கு செல்வோா் கடும் அவதிக்குள்ளாகினா். மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com