

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில், 14 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
கத்தாா் தலைநகா் மஸ்கட்டிலிருந்து 317 பயணிகளுடன், கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.50 மணிக்கு, சென்னை விமானநிலையத்தில் தரையிறங்க வந்தது. ஆனால், சென்னை விமானநிலைய பகுதிகளில் மோசமான வானிலை நிலவியதால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இதனால், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து விட்டு, அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்துக்கு சென்றது.
அதேபோல சென்னை விமானநிலையத்துக்கு தரையிறங்க வந்த துபை, ஷாா்ஜா, லண்டன் விமானங்களும், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி நீண்ட நேரம் பறந்து கொண்டிருந்தன. பின்னா் மழை ஓய்ந்ததும் அந்த விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டன.
இதுபோல, சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய மோரீஷஸ், தாய்லாந்து, துபை, ஷாா்ஜா, லண்டன், அபுதாபி, தில்லி, கொச்சி உள்ளிட்ட பத்து விமானங்கள் சுமாா் ஒரு மணிநேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இதன்படி, சென்னையில் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில், வருகை, புறப்பாடு விமானங்கள் மொத்தம் 14 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.