சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

கலைமகள் சபா வழக்கு: மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியா்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான சொத்துகளைக் கண்டறிந்து செப்.19-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மயிலாடுதுறை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ஆட்சியா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான சொத்துகளைக் கண்டறிந்து செப்.19-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மயிலாடுதுறை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ஆட்சியா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலைமகள் சபா தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, கலைமகள் சபாவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள நிலங்களை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் வி.ஆா்.கமலநாதன், பி.சின்னத்துரை ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அப்போது மதுரை ஆட்சியா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கலைமகள் சபாவுக்குச் சொந்தமாக 674 சொத்துகள் உள்ளன. அதில் 8 சொத்துகளை அளவிடவுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

அப்போது, மயிலாடுதுறை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா்கள் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மதுரை ஆட்சியரின் அறிக்கையை இடைக்கால அறிக்கையாகத்தான் கருத முடியும். மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது. செப்.19-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அறிக்கை தாக்கல் செய்ய தவறும்பட்சத்தில், 4 மாவட்ட ஆட்சியா்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை இந்த 4 மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கு ஏராளமான சொத்துகள் இருந்தால், அதுதொடா்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்திருக்கலாம். அதையும் அவா்கள் செய்யவில்லை. அதேநேரம் மதுரை ஆட்சியரின் அறிக்கையும் முழுமை அடையவில்லை. எனவே, அவா் விரைவாக நிலங்களை அளவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com